புதன், 23 செப்டம்பர், 2009

மும்மொழிக்கொள்கை.. ஒரு கருத்துரையாடல்…தமிழ்???

கடந்த 18ஆம் தேதி (18.09.2009), ஒரு மிக முக்கியமான கருத்துரையாடல். நடத்தியது நமது நாட்டின் மிகச்சிறந்ததாகப்போற்றிக்கொள்ளும் ஒரு ஆங்கிலச் செய்தித்தொலைக்காட்சி.

என்ன பேசுகிறார்கள் எதைப்பற்றிக்கருத்துரையாடுகிறார்கள்?

மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் இனி அனைத்து மாநிலங்களின் கல்வி பயில்வித்தலில் ஒரு மொழியாக ஆங்கிலத்திலும் (உலக நாடுகளுக்கு ஒரு பாலமாக இருக்கும் என்பதால்) அடுத்ததாக இந்தியிலும் (இந்திய மாநிலங்களுக்கிடையில் ஒரு பாலமாக் இருக்கவைக்கலாம் என்ற எண்ணத்தில்) அப்புறம் மாநில மொழியிலும் கற்பிக்கவேண்டும். அதாவது எல்லா மாநிலங்களும் இப்போது இந்தியைப் பாடத்திட்டத்தினுள் சேர்த்தாக வேண்டும். இந்தக்கருத்தை அவர் சூட்சுமமாக /இலை மறை காயாக / ஒரு சிந்திக்கவேண்டிய மாற்றமாக முன் வைத்துள்ளார்.ezhuthu

இதைப்பற்றித்தான் அந்தத்தனியார் தொலைக்காட்சியில் கலந்துரையாடல். நம் நாடெங்கிலிருந்தும் நிறையப்பேர் அழைக்கப்பெற்றிருந்தார்கள். தோராயமாக 1 1/2 மணி நேர விவாதம். அனைவரும் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சில உண்மையாகவே நன்றாகவும், ஆழமாகவும் இருந்தது. இந்தி பேசுபவர்கள் மட்டுமன்றி, கன்னடம், உருது, துளு, மராத்தி என்று பணத்தாளில் அச்சடிக்கப்பெற்றிருக்கும் அனைத்து மொழி பேசுபவர்களும் தத்தமது கருத்துக்களைப்பகிர்ந்துகொண்டனர். இந்தக்கருத்தாய்வு முக்கால்வீசம் ஆங்கிலத்திலும், கால்வீசம் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டது.TV

இந்த நிகழ்ச்சியில் கல்தோன்றி மண்தோன்றா காலத்துமுன் தோன்றிய மூத்த குடியின் மொழியைப்பற்றிக் கருத்துரையும், கலந்துரையும் ஆற்ற அழைக்கபெற்று அதைச்செவ்வன செய்தவர் யார் தெரியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

  1. தமிழ்ப்பேராசிரியரா?
  2. தமிழ் எழுத்தாளரா?
  3. த்மிழ் ஆராய்ச்சியாளரா?
  4. த்மிழ் அரசியல்வாதியா?
  5. தமிழ் இலக்கியவாதியா?
  6. தமிழ்க்கவிஞரா?
  7. தமிழ்ப்புலவரா? questions

மேற்கண்டவற்றில் ஏதாவதொன்றைத்தேர்வு செய்திருந்தீர்களானால், தாங்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பது திண்ணம். அல்லது இது போன்றதொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப்பார்க்க உங்களுக்கு வீட்டில் அனுமதியில்லை என்று பொருள்.

நாம் எல்லோரும் கண்டிப்பாகப்பெருமையடையவேண்டிய செய்தி என்னவென்றால், நமக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியவர் வேறுயாருமல்ல புகழ்பெற்ற தமிழ்(?)திரைப்பட நடிகை திருமதி. குசுபு சுந்தர் அவர்கள்.

வாழ்க தமிழ். வாழ்க இத்தகைய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள். வளர்க அவற்றின் தரம். அவர்களின் செய்திகளைப்பின்பற்றும் மக்களை ஏழாம் அறிவு ஆட்கொள்ளட்டும்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பகுத்தறிவா? எந்தக்கடையில் கிடைக்கிறது….

 

athiest

கடவுள் எதிர்ப்பு. கடவுள் அவமதிப்பு. கடவுள் புறக்கணிப்பு. கடவுள் மறுப்பு. கடவுள் மறைப்பு.

தீண்டாமை எதிர்ப்பு. தீண்டாமை அழிப்பு. தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை மறைப்பு. தீண்டாமை மன்னிப்பு.

மூடப்பழக்கம் எதிர்ப்பு. மூடப்பழக்கம் ஒழிப்பு. மூடப்பழக்கம் அழிப்பு. மூடப்பழக்கம் மறைப்பு. மூடப்பழக்கம் மன்னிப்பு.

women

பெண்ணடிமை எதிர்ப்பு. பெண்ணடிமை ஒழிப்பு. பெண்ணடிமை அழிப்பு. பெண்ணடிமை மறைப்பு. பெண்ணடிமை மன்னிப்பு.

மஞ்சள் துண்டுடித்தி, ஆழ்வார் பாடல்களைப்பாடி, ஒன்றிர்க்கும் அதிகமான மனைவியைக்கொண்டு, சாதிவாரியாக பதவிதந்து / பெற்று, கதராடையையும் – வண்ணக்கரைவேட்டியையும் ஆண்டொன்றுக்கு மாற்றிக்கொள்ளும் மாக்களிடம், மனிதன்கொள்ளும் பகுத்தறிவுப்பாசறையாக உருக்கொண்டு போற்றும் தமிழினம் இருக்கும் வரை பகுத்தறிவு தழைக்குமென்ற எண்ணம் வெறும் பேச்சாகத்தான் இருக்குமேயொழிய வழக்கில்வருவது மிக மிக அரிது.

பகுத்தறிவு:

wish

நரகாசுரனைக்கொன்ற நாளைக்கொண்டாட வரும் பண்டிகை நாளுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது. (ஆனால் அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு அல்லது ஊக்கத்தொகை வழங்கலாம்.)

ரம்சானுக்கும், இயேசு பிறந்தநாளுக்கும் வாழ்த்துத்தெரிவிக்கலாம். மசூதிக்கும் கூட போகலாம். யாருக்கும் தெரியாமல்(முக்காடு போட்டுக்கொண்டு - அதற்குத்தான் துண்டு இருக்கிறதே?) எதிகாலம் உரைப்பவர் சொல்லும் கோவிலுக்குச் செல்லலாம்.

இந்த சாதிக்கு அல்லது மதத்துக்கு ஒதுக்கீடு, அந்த சாதிக்கு அல்லது மதத்துக்கு உள் ஒதுக்கீடு என்று பிரித்தே வைத்திருக்கவேண்டும். சேர்ந்துவிட்டால் எப்படி ஓட்டைப்பிரிப்பது (வீட்டு ஓட்டையும், வாக்குகளையும்)

எந்தவொரு செயலைத்துவக்கும்போதும், அது புதிய சட்டசபைவளாகமாகட்டும், புதிய காவல்நிலையமாகட்டும், குளம் தூர்வாருவதாகட்டும், நல்ல நேரம் பார்த்தே – கும்பிட்டே ஆரம்பிக்கவேண்டும்.

 எச்சரிக்கை:

moodappazhakkam

பகுத்தறிவு என்ற போர்வையில் நாம் இன்று பார்த்துக்கொண்டிருப்ப்வையெல்லாமே பகட்டறிவுதான் என்று புரியும்வரை நமக்கு ஆறறிவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது கடினமே?

six

புதன், 16 செப்டம்பர், 2009

பூச்சாண்டிப்பெட்டி…. இரவு 10 மணி

boochaandi

வீட்டில் குழந்தைகள் சாதாரணமாக தொலைக்காட்சிப்பெட்டியை விடமாட்டார்கள். அவர்களுக்குப்பிடித்தமான கேளிக்கை, விளையாட்டு, பூகோளம், வரலாறு, இயற்கை, நாய், புலி, சிங்கம், காடு, மலை, வடிவேலு, விவேக், சிலந்தி மனிதன், எல்லாம் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அழுவார்கள். என்றும் இல்லாத விதமாக அப்போது தான் நமக்குப்பிடித்த ஆங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். என்ன செய்வது. குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று விட்டுவிடுகிறோம் எப்போதும் மனைவிக்கே விட்டுக்கொடுக்கிறோமே? இன்று குழந்தைகளுக்காக விட்டுக்கொடுப்போமே என்ற ஒரு வஞ்சம் கலந்த பெருமை.

ஆனால் மேலோட்டமாக கவனித்ததில், கடந்த சில மாதங்களாக இரவு 10 மணியானால் போதும் என் மகன் தனியாகப்படுக்க,  தனியாக இருக்க மிகவும் அஞ்சுகிறான். தொலைக்காட்சியும் பார்க்க மறுக்கிறான். எனக்கோ மிக ஆச்சர்யம், அதிசயம்! இது மிக அரிது! அதுவும் குழந்தைகளுக்கு! ஏனென்றால் படுத்தவுடனே தூக்கம் வருவது குழந்தைகளுக்குத்தானே தவிர நமக்கல்ல! அந்த அச்சத்தை முன்னிட்டு இப்போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து நானும் படுத்துக்கொள்கிற கட்டாயம்! இதனால் என்னுடைய மூன்றாம் ஆட்ட ஆங்கிலத்திரைப்படம் தடைப்பட்டுவிட்டது. என்ன செய்வது? இப்போதுதானே நாம் இப்படியெல்லாம் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச்செய்ய இயலும்? சிறிது காலத்திற்குப் பிறகு ந்ம்மைப் பக்கத்தில் அண்ட விடுவார்களா? என்ன? அப்போதெல்லாம் நாம் விரும்பிக்கேட்டால் கூட உங்களுக்கு வேறு வேலையில்லை என்றுதான் சொல்லப்ப்போகிறார்கள். எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது அந்தக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களும் ஆவலாகக்கேட்டுக்கொண்டே தூங்கிவிடுகிறார்கள். அவ்வப்போது ஆச்சர்யப்படுகிறார்கள்!அவ்வப்போது நம்பவில்லை போலத்தெரிகிறது(?). ஆனாலும் விரும்பிக்கேட்கிறார்கள். சிரிக்கிறார்கள். எப்படி இருந்தாலும் த்னியாக, புலம்பெயர்ந்து (தாய் நாட்டிலேயேதான் – வேறு மானிலத்தில்) வாழும் எனக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதுமட்டும் அல்லாமல்,  சில சமயங்களில் என் வாரிசுகள் மைக்கேல் ஜாக்சன் போன்று ஆடிக்காண்பிப்பதையும், காகம் நீர் குடிக்கச்சிரமப்பட்ட கதையும், வலையில் சிக்கிய சிங்கத்தை எலி மீட்ட கதையும், மீண்டும் மீண்டும் கேட்டு, பார்த்து இரசிக்கிறேன்.

நேற்று மனைவியும், குழந்தைகளும் பக்கத்து வீட்டுக்குழந்தைக்கு(அண்ணா?) பிறந்த நாள் விழா கொண்டாடச் சென்றிருந்தார்கள். மணி இரவு 10. நான் பொழுது செல்லாமல் சுணக்கமாக இருந்ததால், கையை வைத்துக்கொண்டு வெறுமனே இருக்காமல், தொலைக்காட்சிப்பெட்டியை நோண்டினேன். எல்லா அலைவரிசைகளிலும், உண்மை (நிஜம்), குற்றம் – நடந்தது என்ன?, போன்ற நிகழ்ச்சிகள். என்ன சொல்கிறார்கள்? பார்ப்போமே? அம்மாவே குழந்தையைக்கடத்துவது, அப்பாவே குழந்தையைக்கொல்வது, கடவுளின் அடியவர்கள் என்பவர்கள் கும்பிடுகிறோம் என்று சொல்லி ஆட்டைக்கடிப்பது, கோழியைக்கடிப்பது, பேய் வந்தவர்களின் முடியை வெட்டி மரத்திலடித்து கட்டுப்படுத்துவது. இன்னும் இங்கு நான் சொல்ல விரும்பாத சொல்லக்கூடாத செய்திகள்? எல்லாம் நம் தலையெழுத்து! பணம் கொடுத்து (தொலைக்காட்சிப்பெட்டி, டாடாவானம்<TATASKY>, பெட்டியை வைக்க ஒரு மரப்பெட்டி) தலைவலியை வாங்கிக்கொள்கிறோம்.

தொலைக்காட்சிப்பெட்டியா? பூச்சாண்டிப்பெட்டியா?

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

கடமையைசெய்................

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.

இலங்கையில் மழைக்காலம் நெருங்கிவிட்டது. வெட்டவெளியில் மிக மோசமான ஆரோக்கியமற்ற சூழலில் அடைபட்டுள்ள தமிழர்களின் நிலை மழை வெள்ளத்தால் தொற்றுநோய் தொடங்கி பல்வேறு விதமாக ஏற்படக்கூடிய இடர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவருகிறது! அவர்களின் உயிரையும் வாழ்வையும் இலங்கை அரசு ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை! தமிழ் சகோதரர்கள் இன்னலுற்று சாவதை வேடிக்கை பார்த்து ரசிக்கவே சிங்கள அரசு காத்திருக்கிறது!

இது நம் முறை!

நம் ஈழ சகோதரர்களுக்காகாக குரல் கொடுக்கும் Sri Lanka Peace Campaign என்கிற அமைப்பு, முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழினம் இயற்கை கொடூரங்களால் இலங்கையில் அழிபடுவதை முன்கூட்டியே தடுப்பது உட்பட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐநா சபைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி எண்ணற்ற ஈமெய்ல்கள் அனுப்புமாறு நம்மை கோருகிறது!

நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள மின்னஞ்சல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனிதச் செயலில் ஈடுபடுத்துங்கள்

ஈழமக்களுக்கான நம் கோரிக்கைகள் அந்த இணையப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனுப்பும் ஈமெய்ல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாதியாலும், இயற்கை சீரழிவாலும், ராணுவ துண்புறுத்தல்கள்லாலும் மனம் நொந்தும் மரணத்தை நோக்கிப் பயணப்படும் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற தயவுசெய்து 20வினாடிகள் செலவழியுங்கள்!

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm


மனித நேயம் காட்ட நல்ல வாய்ப்பு......

வியாழன், 10 செப்டம்பர், 2009

சுவை: நேற்று..இன்று…நாளை…?

நேற்று

 IDLI_NETRUஆண்டு 1979
இட்லி சாப்பிட வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னேன். ஒரு ஆண்டிற்கும் அதிகம் இருக்கும் வீட்டில் செய்து சாப்பிட்டு.

முதல் நாளே அரிசியையும், உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஊறவைத்து விட்டு தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் அம்மா ஆட்டுக்கல்லில் அரிசியை இட்டு நீர் ஊற்றி சுற்ற, நானும் என் தம்பியும் தள்ளிவிட என்று மாவு ஆட்டி இரவு புளிக்கவிட்டோம்.

அதற்கும் அடுத்த நாள் வீட்டில் அனைவரும் பொங்கிய மாவை எடுத்து கலக்கி இட்லி ஊற்றி சாப்பிட்டோம். தேங்காய் துவையல் மட்டும் தான் தொட்டுக்கொள்ள.
என்ன சுவை! என்ன சுவை!

இன்று

 IDLI_INDRU


ஆண்டு 2009
இட்லி சாப்பிட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான் என் மகன். இப்போதெல்லாம் வாரத்திற்கு மூன்று முறை இட்லி சாப்பிடுகிறோம்.

முதல் நாளே அரிசியையும், உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஊறவைத்து விட்டு தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் என் மனைவி மின்சார ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி இரவு புளிக்கவிட்டார்கள்.

அதற்கும் அடுத்த நாள் காலை இட்லி ஊற்றி சாப்பிட்டோம். சாம்பார், தேங்காய் துவையல், இட்லிதூள், இன்னும் என்ன என்னவோ தொட்டுக்கொள்ள.
நாக்குக்குச்சுவைதான்! மனத்துக்கு எங்கே சுவை?

நாளை

????????

புதன், 9 செப்டம்பர், 2009

புரிதல்

 

என்னைப்பற்றி:

ஆறடி மனிதன் (அளவுகோல் காட்டியது)

ஆறறிவு (?)

அழகானவன் (என் தாய் எப்போதும் சொல்வது)

அறிவுள்ளவன் (என் தந்தை என்னைத்தவிர மற்றவர்களிடம் சொல்வது)

கடின உழைப்பாளி (என் தம்பி அனைவரிடமும் சொல்வது)

எதைக்கேட்டாலும் வாங்கித்தருபவர் (என் குழந்தைகள் சொல்வது)

எந்த வேலையையும் முற்றிலுமாக செய்யக்கூடியவர் (அலுவலகத்தில் சொல்வது)

எப்போதும் நம்பலாம். எதற்கும் நம்பலாம் (நண்பர்கள் சொல்வது)

பிழைக்கதெரியாதவர் (மனைவி சொல்வது)

எது உண்மை? (நான் கேட்பது)

வியாழன், 3 செப்டம்பர், 2009

தமிழில் எனது "அ"


இனிய வலைப்பூ வாசகர்களுக்கும் / பதிவர்களுக்கும் வணக்கம். இன்று முதல் தமிழிலும் உங்களை சந்திக்க (நிந்திக்க) முடிவு செய்து இந்த வலைப்பூதளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்.
காரணங்கள்:
௧. பாலாஜியின் இடைவிடா நினைவுறுத்தல்கள்
௨. சில பதிவர்களின் அற்புதமான பதிவுகள்
௩. சில கருத்துக்கள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது
௪. சில பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகினால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது

உங்கள் அனைவரின் ஆதரவும், சுட்டிக்காட்டுதலும், வழிகாட்டுதலும் எனக்கு நிறைய தேவைப்படும்.