- பொட்டில் அறைந்த ஒரு தொடர்மின்னஞ்சலின் நகல். (நன்றி: வசந்த்ராஜ்)
நாளைய தமிழகம்??????????????
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற வள்ளுவரின் வாக்கொத்த என் தாய்க்கும், என் தந்தைக்கும், எனை நிதம் ஊட்டி வளர்க்கும் மனைவிக்கும், மனதை வருடும் மகன்களுக்கும், முதுகெலும்பாய் இருக்கும் தமையனுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆதரவாகவும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி பாராட்டி அவர்கள் வாயிலாக இவ்வுலகில் அறிந்த, அறிய முயற்சிக்கிற, அறிய வேண்டாத நிகழ்வுகளை, செய்திகளை, மகிழ்ச்சிகளை பகிர்வதற்கான தளம்.
ஓரிரு ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. என் நேரம் நான் அமெரிக்காவில் (நான்கு சக்கர வண்டிகளைத்தயாரிக்கும் முக்கிய நகரான டெட்ரோய்ட்) இறங்கிய நாள் செப்டம்பர் 11 (அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் – இரட்டைகோபுரங்கள் வீழ்த்தப்பட்ட நாள். சில வருடம் கழித்து நமது பயணம்). விமான நிலையத்திலேயே தொல்லை ஆரம்பித்துவிட்டது. நமது திருவுருவமோ தாடியோடு. விமானத்தை விட்டு இறங்கி பணம் போட்டு (2 அமெரிக்க டாலர்) தள்ளுவண்டி எடுத்து என்னுடைய பெட்டிகளுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு வயதான மூதாட்டி ஆந்திராவில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் மகனைப்பார்க்க மூட்டை முடிச்சுகளுடன் இறங்கியிருந்தார். எப்படி தள்ளுவண்டியை எடுக்கவேண்டும், யாரிடம் கேட்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. ஏதோ மறுபடியும் எனது கடனட்டையைச் சுரண்டி அவர்களுக்கும் எடுத்துக்கொடுத்தேன் – சக மனிதர்களுக்கு உதவாவிட்டால் எப்படி. எனக்கு ஓரளவு தெலுங்கு தெரியுமாதலால் அந்தப்பாட்டி என்னைத்தவறாகவோ / ச்ந்தேகமாகவோ பார்க்காமல் பாசத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.
அப்புறம் வந்தது நம்ம நேரம். ஒலிபெருக்கியில் சில பேருடன் சேர்த்து என் பெயரும் அழைக்கப்பட்டது. 100 ரூபாய் செலவு செய்த தள்ளுவண்டியோடு என்னெவென்று கேட்கப்போனேன். சொன்னார்கள் என்னுடைய மூட்டை முடிச்சுகள் அனைத்தும் வேறு ஒரு நகரத்திற்கு (நியூயார்க்) கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என்று. எப்படி என்றால் பதில் நீங்கள் இலண்டனில் விமானம் மாறும்போது உங்களுடைய பொருட்கள் தவறுதலாக வேறு விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டது என்று. பிறகு விமானச்சேவை புரிபவர்களுக்குப் புரிய வைத்து ஒரு நாள் தங்கலுக்கான உறைவிடம்(5 நட்சத்திரம்), உடுக்கத்துணி, காலணி, உள்ளாடை அனைத்தையும் வாதாடி வாங்கிக்கொண்டேன். அடுத்தநாள் அனைத்தும் பத்திரமாக எனது அறைக்குவந்து சேர்ந்தது. ஆனாலும் அனைத்தும் முழுவதுமாக கலைக்கப்பட்டு, நன்றாக பரிசோதனை செய்யப்பட்டுஇருந்தது தெரிந்தது.
இந்தியாவில் எந்த ஒரு விமான நிலையத்திலும் தள்ளுவண்டிக்குப் பணம் கட்ட வேண்டியதில்லை. இந்தியா – ஏழை நாடு.
தள்ளுவண்டிக்கு பணம் வாங்கும் அமெரிக்கா – பணக்கார நாடு.
அக்கரை… பச்சை……? தொடரும்….
பின்குறிப்பு: நல்லவேளை இது ஒரு சாதாரண இந்தியக்குடிமகனுக்கு நடந்தது. இதுவே ஒரு சாருக்கான், கமலகாசன் போன்றோர்க்கு நடந்திருந்தால் நமது தொலைக்காட்சி அன்பர்களுக்கு வேலைப்பளு எவ்வளவு அதிகரித்திருக்கும். நமது செய்தித்தாள்களுக்கும் எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும். தப்பிக்கவைத்துவிட்டேன்.,
விழிப்பு
அணைப்பு
சிரிப்பு
குறும்பு
வளர்ப்பு
படிப்பு
உழைப்பு
சம்பாதிப்பு
ஈர்ப்பு
கலப்பு
பொறுப்பு
சுமப்பு
இடையிடையே … களிப்பு, இறுமாப்பு, விருப்பு, வெறுப்பு, கொழுப்பு, எதிர்ப்பு, இழப்பு, களைப்பு, அலுப்பு
கடைசியில்……வேறென்ன?
இறப்பு
பிறகு என்ன?
விதைப்பு (புதைப்பு) அல்லது எரிப்பு (உரமாக்க)!!! என்றால் மட்டுமே நல்ல பிழைப்பு…
ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியைப்பார்த்தபோது:
திரைப்படம் : எதிர்நீச்சல்
காட்சி: மாது கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டார் என்று (மேலும் சில பல குற்றச்சாட்டுகளுடன்) கூறப்பட்டு அதை நம்பிக்கொண்டு ஒரு நல்ல நண்பனான நாயர் அவனை அடித்துவிடுவார். பிறகு உண்மை தெரிந்து மன்னிப்புக்கேட்பார். அப்போது மாது என்கிற கதாபாத்திரம், ஒரு சிறிய வசனம் பேசும். ”நண்பன் சாவதைகூட தாங்கிக்கொள்வேன். ஆனால் நட்பு சாவதை ஒரு நாளும் தாங்க முடியாது என்று”
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்தபோது:
நிகழ்ச்சி: காதோடுதான் நான் பேசுவேன்
நிகழ்வு: ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா… பாடலும் பாடல் படமாக்கப்பட்ட விதமும். அந்தக்கருத்தும்.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஓர் ஆவணப்படம் பார்த்தபோது:
ஆவணப்படம்: ஒரு கண்டுபிடிப்பைப்பற்றிய ஆவணப்படம். ஒருவருக்கு ஒரு கால் விபத்தின் போது பறிபோய்விட்டது. அதற்கு மாற்றாக செயற்கைக்கால் - மிக மெலிதான எடை குறைவான – பொருத்திவிடுகிறார்கள். அந்தக்கால் கொண்டு அவர் ஓடினார், மிதிவண்டி ஓட்டினார். மரம் ஏறினார்.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
ஒரு தொலைபேசி அழைத்தபோது:
நிகழ்ச்சி: ஒரு தனிமையான நாள், மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். உணவு அருந்தக்கூட மனமின்றி இருட்டை மேய்ந்தபடி, முகட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனது என் நண்பனுடன் / நணபர்களுடன் கோவையில் இருந்த நாட்களை மெல்ல அசைபோட்டது. அந்த நண்பனுடன் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவன் திரைகடல் ஓடி திரவியம் தேடிக்கொண்டிருப்பவன். எனக்கு எப்போதெல்லாம் மனக்கவலையும், மற்ற எந்தக்கவலை வந்தாலும் உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைபவன். நேரம் நள்ளிரவாகியிருந்தது. எனவே நான் வேண்டாம் நாளை தகவல் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றிருந்தேன். எப்படியோ உணர்ந்து அவனே கூப்பிட்டான். பேசினான். நான் நன்றாகத் தூங்க வழி செய்தான்.
விளைவு: கண்ணில் நீர். தூங்கப்போன எனக்கு.
செய்தித்தாள் படித்தபோது:
செய்தி: கொட்டும் மழையில், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும், போதிய உணவின்றி, இயற்கை உபாதைகளைக் கழிக்க போதிய வசதியின்றி சொந்த மண்ணில் அவதிப்படும் சகமனிதர்களைப்பற்றி.
விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
நானும், பார்த்து, படித்துக்கொண்டிருந்த கண்ணும், வடித்த கண்ணீரும் ஒன்று தான். ஆனால், உணர்வும், தாக்கமும் வேறு வேறு. ஒரு புறம் உணர்ச்சியின் வெளிப்பாடு, மறுபுறம் இயலாமையின் வேக்காடு.
சம்பவம் – 1
ஒரு நண்பரின் தாயார் நீண்டநாள் புற்றுநோய் போராட்டத்திற்குப்பிறகு காலமானார். அந்த இறுதிச்சடங்கிற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று துக்கத்தைப்பகிர்ந்துகொண்டோம். அந்தச்சடங்கிற்கு இறந்தவரின் சகோதரிகள் இருவர் ஆசுதிரேலியாவில் இருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டபோதும், அவர்கள் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோதும் சகோதரி நோயால் அவதிப்பட்டுகொண்டிருந்தார் என்பதே தகவல் மற்றும் உண்மையும் கூட. ஆனால் அவர்கள் இந்தியா வந்தடைந்தபோது இறந்த உடலைத்தான் பார்க்க நேரிட்டது. அவர்கள் இருவரும் அழுதது இப்போதும் மனதைக்கனக்கிறது.
இந்த நிகழ்வை என் அலுவலக சகாவிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் என் கருத்தை மறுதலித்தார். எப்படி 30 வருடம் பிரிந்தவர்கள் ஒரே நாளில் இழப்பைத்தாங்காமல் அழமுடியும். நான் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
சம்பவம் – 2
சமீபத்தில், குடும்பத்துடன் பங்களூரு-ல் இருந்து வேலூருக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக புகைவண்டிநிலையத்தில் காத்திருந்தோம். இரு சகோதரர்கள் மிக அன்னியோன்யமாக பேசிக்கொண்டதைக்கேட்க நேர்ந்தது. ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - “நான் இந்த இறப்பை எதிர்பார்த்துக்காத்திருந்தேன். நல்ல முறையில் தயாராகவே இருந்தேன். எனவே என்னை இந்த இழப்பு பாதிக்கவும் இல்லை நான் கலங்கவும் இல்லை” – என்று. மற்றவர் வெறும் மௌனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
இழப்பை – மனம் தாங்குமா? தவிக்குமா?
இழப்பு – தூரம் சார்ந்ததா?
இழப்பு – நேரம் சார்ந்ததா?
இழப்பு – பணம் சார்ந்ததா?
இழப்பு – பதவி சார்ந்ததா?
இழப்பு – உறவு சார்ந்ததா?
இழப்பு – உணர்வு சார்ந்ததோ? ஞாபகம் சார்ந்ததோ? பழக்கம் சார்ந்ததோ? மனம் புரியாமல் தவிக்கிறது.
எனக்குத்திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவிற்கு என் பெற்றோர் வந்தவுடன் என் உறவினர்கள், திருமண அமைப்பாளர்கள் என்று அனைவரிடமும் சொல்லிவைத்தாகிவிட்டது. நான் வேறு வெளிநாடு சென்றுவந்த மணமகன் அல்லவா? எத்தனை பெண்கள் புகைப்படங்கள், பிறந்தநாள், நேரக்கணக்குக்கள் அனைத்தும் பொருந்திப்பார்க்க, படிப்புப்பொருத்தம் பார்க்க என்று ஒரு ஐந்தாண்டுத்திட்டமிடலைவிட தடபுடலாக ஒரே கருத்துப்போட்டிதான். எனக்கு எல்லாவற்றிலும் உடன்பாடுதான்.
படித்தபெண் – சரி (அமைந்தது என்னைவிட படித்தபெண்).
வேலைக்குப்போகும் பெண் – இல்லை (கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப்போக விரும்பும் பெண்ணும் வேண்டாம்)
பெண்பார்க்கப்போனால் அந்தப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். எனவே உங்கள் விசாரணைகளை முடித்துவிட்டு உங்களுக்கு (பெற்றோர்களுக்கு) அனைத்துவிதத்திலும் பொருந்தியிருந்தால் மட்டுமே நான் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு என் முடிவை தெரிவிப்பேன் என்று திட்டவட்டமாகச்சொல்லிவிட்டேன். அப்படியே எல்லாம் நடந்தது. நானும் ஒன்றுக்குப்பலமுறை என் வருங்கால வாழ்க்கைத்துணையிடம் அவர்களுடைய சம்மதம் (முதுனிலைப்பட்டதாரியை வேலைக்கு அனுப்பமாட்டேன்) கேட்டு பெற்றுத் திருமணம் செய்துகொண்டோம்.
என் நண்பர்கள் அல்லது நலம் விரும்பிகள் என்னிடம் சொன்னவை இரண்டு:
1. நான் ஒரு பெண்ணடிமையாளன் (ஆணாதிக்கவாதி)
2. மனைவி வேலைக்குச்சென்றால் பணத்திற்குப்பஞ்சம் இருக்காது
மேலே சொன்னவைகள் சரியா? தவறா? உண்மையா? பொய்யா? எனக்குத்தெரியாது!
எனது திருமணம் - 1996
எங்கள் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் என்னையும் சேர்த்து. அவற்றில் நாங்கள் அனைவரும் ஓர் குடும்பம் போல், நண்பர்களாக, நல்ல தோழர்களாக வாழ்ந்துவந்தோம். எனக்கும் இன்னும் சில சகாக்களுக்கும் அலுவலகத்தில் அலுவல் (தொழிற்கூடத்துக்குள் அல்ல). எங்கள் அலுவலகம் வரவேற்பறையின் மேல், முதல்தளத்தில் பரந்துவிரிந்து இருக்கும். அங்கே சில பெண் அதிகாரிகளும் பணிபுரிந்து வந்தார்கள். அனைவரும் திருமணம் ஆனவர்களே!! அவர்களும் எங்களுடன் நல்ல மரியாதைகலந்த நட்புனே பழகிவந்தனர். ஏனெனில் நானும் இன்னும் சிலரும் அவர்களது உயரதிகாரிகள்.
எங்கள் வேலை நேரம் சரியாக காலை 8.00 மணிக்கு தொடங்கும். எங்கள் தொழிற்சாலை நேரம் தவறுதலை மன்னிக்காது. அது யாராக இருந்தாலும் சரி. என்ன காரணமாக இருந்தாலும் சரி. ஒழுங்கு நடவடிக்கைதான்!
தினமும் காலையில் கோவை (கோயம்பத்தூர்) காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 7.00 மணி பேருந்தைப்பிடித்து, 7.45 மணிக்கு தென்னம்பாளையம் / அரசூர் வந்து எதிரிலிருக்கும் அக்கா கடையில் பொங்கலோ, இட்லியோ, தோசையோ சுடச்சுட, நாக்குப்புண்ணாகப்புண்ணாகச் சாப்பிட்டு நெடுஞ்சாலையைக்கடந்து நேரத்துக்கு அட்டையை ஓட்டையிடவேண்டும் 8.00 மணிக்குள். பேருந்து காந்திபுரத்தில் இருந்து புறப்படுவதால் எனக்கு இடம் கிடைத்துவிடும். அது பேருந்துநிலையத்தைவிட்டு வெளிவரும்போதே நிரம்பிவழியும் கூட்டம். நான் எப்போதும்போல் பயணச்சீட்டு வாங்கியவுடன் குட்டித்தூக்கம் போடத்தொடங்கிவிடுவேன். எல்லோருக்கும் என்மேல் பொறாமையுண்டு (காலிரண்டும் முன்னிருக்கையில் மடித்துமுட்டுக்கொடுத்தவுடன் தூக்கம் வந்து தாலாட்டுகிறதே இவனுக்கு இவ்வளவு சத்ததிற்கும் இடையில் என்று). ஆனாலும் சில நண்பர்கள் பா.நா. பாளையம், பீளமேடு, சித்ரா போன்ற நிறுத்தங்களில் ஏறுவர். என்னைத்தொந்தரவு செய்து எழுப்பிவிட்டு ஒரே அரட்டைதான். அவர்கள் ஏறும் நிறுத்தங்களில் படியில் இடம் கிடைப்பதே மிகவும் கடினம். இந்தப்பேருந்தைத்தவறவிட்டால் அன்று விடுமுறை எடுப்பதைத்தவிரவேறு வழியில்லை. எனவே தொங்கிக்கொண்டாவது வருவார்கள்.
அப்படி ஒரு நிறுத்தத்தில் அன்று நான் கண்டது இன்றும் நினைவில் உள்ளது. என் அலுவலகத்தில் பணிபுரியும் சகபெண் ஊழியர், நிறைமாத கர்ப்பிணி, 60 கி.மீ. வேகத்தில், வளைந்து, நெளிந்து, குதித்து, சென்றுகொண்டிருந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு 20 கி.மீ தூரம் பயணம் செய்து பணிபுரிய வந்துகொண்டிருந்தார்.![]()
இந்நிகழ்ச்சி - 1994
கடந்த 18ஆம் தேதி (18.09.2009), ஒரு மிக முக்கியமான கருத்துரையாடல். நடத்தியது நமது நாட்டின் மிகச்சிறந்ததாகப்போற்றிக்கொள்ளும் ஒரு ஆங்கிலச் செய்தித்தொலைக்காட்சி.
என்ன பேசுகிறார்கள் எதைப்பற்றிக்கருத்துரையாடுகிறார்கள்?
மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் இனி அனைத்து மாநிலங்களின் கல்வி பயில்வித்தலில் ஒரு மொழியாக ஆங்கிலத்திலும் (உலக நாடுகளுக்கு ஒரு பாலமாக இருக்கும் என்பதால்) அடுத்ததாக இந்தியிலும் (இந்திய மாநிலங்களுக்கிடையில் ஒரு பாலமாக் இருக்கவைக்கலாம் என்ற எண்ணத்தில்) அப்புறம் மாநில மொழியிலும் கற்பிக்கவேண்டும். அதாவது எல்லா மாநிலங்களும் இப்போது இந்தியைப் பாடத்திட்டத்தினுள் சேர்த்தாக வேண்டும். இந்தக்கருத்தை அவர் சூட்சுமமாக /இலை மறை காயாக / ஒரு சிந்திக்கவேண்டிய மாற்றமாக முன் வைத்துள்ளார்.![]()
இதைப்பற்றித்தான் அந்தத்தனியார் தொலைக்காட்சியில் கலந்துரையாடல். நம் நாடெங்கிலிருந்தும் நிறையப்பேர் அழைக்கப்பெற்றிருந்தார்கள். தோராயமாக 1 1/2 மணி நேர விவாதம். அனைவரும் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சில உண்மையாகவே நன்றாகவும், ஆழமாகவும் இருந்தது. இந்தி பேசுபவர்கள் மட்டுமன்றி, கன்னடம், உருது, துளு, மராத்தி என்று பணத்தாளில் அச்சடிக்கப்பெற்றிருக்கும் அனைத்து மொழி பேசுபவர்களும் தத்தமது கருத்துக்களைப்பகிர்ந்துகொண்டனர். இந்தக்கருத்தாய்வு முக்கால்வீசம் ஆங்கிலத்திலும், கால்வீசம் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டது.![]()
இந்த நிகழ்ச்சியில் கல்தோன்றி மண்தோன்றா காலத்துமுன் தோன்றிய மூத்த குடியின் மொழியைப்பற்றிக் கருத்துரையும், கலந்துரையும் ஆற்ற அழைக்கபெற்று அதைச்செவ்வன செய்தவர் யார் தெரியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
மேற்கண்டவற்றில் ஏதாவதொன்றைத்தேர்வு செய்திருந்தீர்களானால், தாங்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பது திண்ணம். அல்லது இது போன்றதொலைக்காட்சிநிகழ்ச்சிகளைப்பார்க்க உங்களுக்கு வீட்டில் அனுமதியில்லை என்று பொருள்.
நாம் எல்லோரும் கண்டிப்பாகப்பெருமையடையவேண்டிய செய்தி என்னவென்றால், நமக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசியவர் வேறுயாருமல்ல புகழ்பெற்ற தமிழ்(?)திரைப்பட நடிகை திருமதி. குசுபு சுந்தர் அவர்கள்.
வாழ்க தமிழ். வாழ்க இத்தகைய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள். வளர்க அவற்றின் தரம். அவர்களின் செய்திகளைப்பின்பற்றும் மக்களை ஏழாம் அறிவு ஆட்கொள்ளட்டும்.