திங்கள், 26 அக்டோபர், 2009

ஆணாதிக்கமா?

 

IMG_0610 எனக்குத்திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவிற்கு என் பெற்றோர் வந்தவுடன் என் உறவினர்கள், திருமண அமைப்பாளர்கள் என்று அனைவரிடமும் சொல்லிவைத்தாகிவிட்டது. நான் வேறு வெளிநாடு சென்றுவந்த மணமகன் அல்லவா? எத்தனை பெண்கள் புகைப்படங்கள், பிறந்தநாள், நேரக்கணக்குக்கள் அனைத்தும் பொருந்திப்பார்க்க, படிப்புப்பொருத்தம் பார்க்க என்று ஒரு ஐந்தாண்டுத்திட்டமிடலைவிட தடபுடலாக ஒரே கருத்துப்போட்டிதான். எனக்கு எல்லாவற்றிலும் உடன்பாடுதான்.

படித்தபெண் – சரி (அமைந்தது என்னைவிட படித்தபெண்).

வேலைக்குப்போகும் பெண் – இல்லை (கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப்போக விரும்பும் பெண்ணும் வேண்டாம்)

பெண்பார்க்கப்போனால் அந்தப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். எனவே உங்கள் விசாரணைகளை முடித்துவிட்டு உங்களுக்கு (பெற்றோர்களுக்கு) அனைத்துவிதத்திலும் பொருந்தியிருந்தால் மட்டுமே நான் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு என் முடிவை தெரிவிப்பேன் என்று திட்டவட்டமாகச்சொல்லிவிட்டேன். அப்படியே எல்லாம் நடந்தது. நானும் ஒன்றுக்குப்பலமுறை என் வருங்கால வாழ்க்கைத்துணையிடம் அவர்களுடைய சம்மதம் (முதுனிலைப்பட்டதாரியை வேலைக்கு அனுப்பமாட்டேன்) கேட்டு பெற்றுத் திருமணம் செய்துகொண்டோம்.

என் நண்பர்கள் அல்லது நலம் விரும்பிகள் என்னிடம் சொன்னவை இரண்டு:

1. நான் ஒரு பெண்ணடிமையாளன் (ஆணாதிக்கவாதி)

2. மனைவி வேலைக்குச்சென்றால் பணத்திற்குப்பஞ்சம் இருக்காது

மேலே சொன்னவைகள் சரியா? தவறா? உண்மையா? பொய்யா? எனக்குத்தெரியாது!

எனது திருமணம் - 1996

 

எங்கள் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் என்னையும் சேர்த்து. அவற்றில் நாங்கள் அனைவரும் ஓர் குடும்பம் போல், நண்பர்களாக, நல்ல தோழர்களாக வாழ்ந்துவந்தோம். எனக்கும் இன்னும் சில சகாக்களுக்கும் அலுவலகத்தில் அலுவல் (தொழிற்கூடத்துக்குள் அல்ல). எங்கள் அலுவலகம் வரவேற்பறையின் மேல், முதல்தளத்தில் பரந்துவிரிந்து இருக்கும். அங்கே சில பெண் அதிகாரிகளும் பணிபுரிந்து வந்தார்கள். அனைவரும் திருமணம் ஆனவர்களே!! அவர்களும் எங்களுடன் நல்ல மரியாதைகலந்த நட்புனே பழகிவந்தனர். ஏனெனில் நானும் இன்னும் சிலரும் அவர்களது உயரதிகாரிகள்.

எங்கள் வேலை நேரம் சரியாக காலை 8.00 மணிக்கு தொடங்கும். எங்கள் தொழிற்சாலை நேரம் தவறுதலை மன்னிக்காது. அது யாராக இருந்தாலும் சரி. என்ன காரணமாக இருந்தாலும் சரி. ஒழுங்கு நடவடிக்கைதான்!

தினமும் காலையில் கோவை (கோயம்பத்தூர்) காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 7.00 மணி பேருந்தைப்பிடித்து, 7.45 மணிக்கு தென்னம்பாளையம் / அரசூர் வந்து எதிரிலிருக்கும் அக்கா கடையில் பொங்கலோ, இட்லியோ, தோசையோ சுடச்சுட, நாக்குப்புண்ணாகப்புண்ணாகச் சாப்பிட்டு நெடுஞ்சாலையைக்கடந்து நேரத்துக்கு அட்டையை ஓட்டையிடவேண்டும் 8.00 மணிக்குள். பேருந்து காந்திபுரத்தில் இருந்து புறப்படுவதால் எனக்கு இடம் கிடைத்துவிடும். அது பேருந்துநிலையத்தைவிட்டு வெளிவரும்போதே நிரம்பிவழியும் கூட்டம். நான் எப்போதும்போல் பயணச்சீட்டு வாங்கியவுடன் குட்டித்தூக்கம் போடத்தொடங்கிவிடுவேன். எல்லோருக்கும் என்மேல் பொறாமையுண்டு (காலிரண்டும் முன்னிருக்கையில் மடித்துமுட்டுக்கொடுத்தவுடன் தூக்கம் வந்து தாலாட்டுகிறதே இவனுக்கு இவ்வளவு சத்ததிற்கும் இடையில் என்று). ஆனாலும் சில நண்பர்கள் பா.நா. பாளையம், பீளமேடு, சித்ரா போன்ற நிறுத்தங்களில் ஏறுவர். என்னைத்தொந்தரவு செய்து எழுப்பிவிட்டு ஒரே அரட்டைதான். அவர்கள் ஏறும் நிறுத்தங்களில் படியில் இடம் கிடைப்பதே மிகவும் கடினம். இந்தப்பேருந்தைத்தவறவிட்டால் அன்று விடுமுறை எடுப்பதைத்தவிரவேறு வழியில்லை. எனவே தொங்கிக்கொண்டாவது வருவார்கள்.

அப்படி ஒரு நிறுத்தத்தில் அன்று நான் கண்டது இன்றும் நினைவில் உள்ளது. என் அலுவலகத்தில் பணிபுரியும் சகபெண் ஊழியர், நிறைமாத கர்ப்பிணி, 60 கி.மீ. வேகத்தில், வளைந்து, நெளிந்து, குதித்து, சென்றுகொண்டிருந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு 20 கி.மீ தூரம் பயணம் செய்து பணிபுரிய வந்துகொண்டிருந்தார்.images

இந்நிகழ்ச்சி - 1994

4 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

So What?

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி!

க.பாலாசி சொன்னது…

தங்களைப்பபோலவே எனக்கும் வேலைக்கு பெண்கள் செல்வது என்பது பிடிக்காத செயல்தான். என்னால் சம்பாதித்து என் குடும்பத்தை காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு மிக உண்டு. அதனால் எனக்கு வரப்போகும் மனைவி சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை. தங்களின் முடிவு என் கண்ணோட்டத்தில் சரிதான்.

நீங்க கடைசியா சொன்ன விசயம் வருந்ததக்க நிகழ்வுதான்.

நல்ல இடுகை....

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பாலாஜி,
புரிதலுக்கும், ஒத்த கருத்துக்கும்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. என் பதிவு புரியுமோ புரியாதோ என்று. நன்றி.

கருத்துரையிடுக