வியாழன், 17 டிசம்பர், 2009

……பு

பிறப்புHuman_Life_Cycle

விழிப்பு

அணைப்பு

சிரிப்பு

குறும்பு

வளர்ப்பு

படிப்பு

உழைப்பு

சம்பாதிப்பு

ஈர்ப்பு

கலப்பு

பொறுப்பு

சுமப்பு

இடையிடையே … களிப்பு, இறுமாப்பு, விருப்பு, வெறுப்பு, கொழுப்பு, எதிர்ப்பு, இழப்பு, களைப்பு, அலுப்பு

கடைசியில்……வேறென்ன?

இறப்பு

பிறகு என்ன?

விதைப்பு (புதைப்பு) அல்லது எரிப்பு (உரமாக்க)!!! என்றால் மட்டுமே நல்ல பிழைப்பு…

திங்கள், 14 டிசம்பர், 2009

கண்ணீர்

 

ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியைப்பார்த்தபோது:

திரைப்படம் : எதிர்நீச்சல்

காட்சி: மாது கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டார் என்று (மேலும் சில பல குற்றச்சாட்டுகளுடன்) கூறப்பட்டு அதை நம்பிக்கொண்டு ஒரு நல்ல நண்பனான நாயர் அவனை அடித்துவிடுவார். பிறகு உண்மை தெரிந்து மன்னிப்புக்கேட்பார். அப்போது மாது என்கிற கதாபாத்திரம், ஒரு சிறிய வசனம் பேசும். ”நண்பன் சாவதைகூட தாங்கிக்கொள்வேன். ஆனால் நட்பு சாவதை ஒரு நாளும் தாங்க முடியாது என்று”

விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு

 

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்தபோது:

நிகழ்ச்சி: காதோடுதான் நான் பேசுவேன்

நிகழ்வு: ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா… பாடலும் பாடல் படமாக்கப்பட்ட விதமும். அந்தக்கருத்தும்.

விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு

 

ஓர் ஆவணப்படம் பார்த்தபோது:

Jaiput Foot

ஆவணப்படம்: ஒரு கண்டுபிடிப்பைப்பற்றிய ஆவணப்படம். ஒருவருக்கு ஒரு கால் விபத்தின் போது பறிபோய்விட்டது. அதற்கு மாற்றாக செயற்கைக்கால் - மிக மெலிதான எடை குறைவான – பொருத்திவிடுகிறார்கள். அந்தக்கால் கொண்டு அவர் ஓடினார், மிதிவண்டி ஓட்டினார். மரம் ஏறினார்.

விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு

 

ஒரு தொலைபேசி அழைத்தபோது:

Telephone_Message

நிகழ்ச்சி: ஒரு தனிமையான நாள், மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். உணவு அருந்தக்கூட மனமின்றி இருட்டை மேய்ந்தபடி, முகட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனது என் நண்பனுடன் / நணபர்களுடன் கோவையில் இருந்த நாட்களை மெல்ல அசைபோட்டது. அந்த நண்பனுடன் பேசினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவன் திரைகடல் ஓடி திரவியம் தேடிக்கொண்டிருப்பவன். எனக்கு எப்போதெல்லாம் மனக்கவலையும், மற்ற எந்தக்கவலை வந்தாலும் உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைபவன். நேரம் நள்ளிரவாகியிருந்தது. எனவே நான் வேண்டாம் நாளை தகவல் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றிருந்தேன். எப்படியோ உணர்ந்து அவனே கூப்பிட்டான். பேசினான். நான் நன்றாகத் தூங்க வழி செய்தான்.

விளைவு: கண்ணில் நீர். தூங்கப்போன எனக்கு.

செய்தித்தாள் படித்தபோது:

செய்தி: கொட்டும் மழையில், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும், போதிய உணவின்றி, இயற்கை உபாதைகளைக் கழிக்க போதிய வசதியின்றி சொந்த மண்ணில் அவதிப்படும் சகமனிதர்களைப்பற்றி.

விளைவு: கண்ணில் நீர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு

நானும், பார்த்து, படித்துக்கொண்டிருந்த கண்ணும், வடித்த கண்ணீரும் ஒன்று தான். ஆனால், உணர்வும், தாக்கமும் வேறு வேறு. ஒரு புறம் உணர்ச்சியின் வெளிப்பாடு, மறுபுறம் இயலாமையின் வேக்காடு.