வியாழன், 11 மார்ச், 2010

ஒரு நடிகையின் (குமுதம்) கதை….

 

இன்று…

ஒரு வார காலமாக தமிழ் மக்கள் அனைவரும் பரபரப்பாக பேசிகொண்டிருப்பது நித்தியானந்தர் விவகாரத்தை தான். பொது மக்களுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சிதான் குமுதத்துக்கும்.
கடந்த சில வருடங்களாக நித்தியானந்தர் நமது இதழில் கட்டுரை தொடர் ஒன்று எழுதிவந்தார். குமுதம் என்றுமே புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரும் இதழ்.ஆன்மீக கருத்துக்களை எளிய நடையில் சொல்லும் ஒரு கட்டுரை தொடர் வெளியிட முடிவு செய்த போது நித்தியானந்தர் குறித்த தகவல்கள் கிடைத்தன.அவரும் குமுதத்தில் எழுத ஆர்வமாக இருந்தார் எழுதினார்.பெருவாரியான வாசகர்களுக்கு அவருடைய கருத்துக்கள் பிடித்திருந்தன.அந்த கருத்துக்களில் யாரும் குறை காண வில்லை.சென்ற வாரம் அந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வரை.
கோபம்,ஆத்திரம்,வெறுப்பு,ஏமாற்றம்,அதிர்ச்சி இவையெல்லாம் அந்த வீடியோவை பார்த்தபோது எல்லோருக்கும் வந்த உண்மையான உணர்வுகள் .
நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடிப்படை. எல்லாம் நல்ல விதமாய் நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் செயல்படுகிறோம்.ஆனால் அந்த நம்பிக்கை பொய்க்கும் வகையில் காட்சிகள் மாறும் போது?
நித்தியானந்தர் மீது பலமான குற்றசாட்டுகள் எழுப்ப பட்டிருக்கின்றன.அது உண்மையா,இல்லையா என்று அவருடைய ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் சர்ச்சை செய்கிறார்கள்.வழக்கு நீதி மன்றத்தை நோக்கி சென்றுருக்கிறது. இந்த சூழ்நிலையில் நித்தியானந்தரின் தொடரை வெளியிட குமுதம் விரும்பவில்லை. குமுதம் வாசகர்களாகிய நீங்களும் இதைத்தான் விரும்புவீர்களென்று  நம்புகிறோம்.

 

அன்று…

சில பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மிக முக்கியமான, தமிழ் கூறும் நல்லுலகிற்கு குமுதம் நிறுவனத்தாரிடம் இருந்து ஒரு அற்புதமான வழிகாட்டும் தொடர் வெளியிடப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், உலகமெங்கும் விற்பனையாகும் வார இதழ், உண்மையாகவே ஒரு வரலாற்றுத்தகவல்கள் நிறைந்த அந்தத் தொடரை வெளியிட்டுவந்தது.  மேலும் அது நிறையப்பேருக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாக இருந்தது. வெற்றியடைய பின்பற்றவேண்டிய நுண்மையான பல நுட்பங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எழுதப்பட்டிருந்தது. எல்லாத்தொடர்களிலும் வருவது போலவே அந்தத்தொடரில் கூட கதாபாத்திரங்களின் பெயர் இலை மறை காயாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குமுதம் வாங்கிய உடனே அனைத்து இளைஞர்களும், இளைஞிகளும் வாங்கிப்படித்த தொடர். படித்தவுடன் அத்தொடரில் பொதிந்திருக்கும் தகவல் (இலை மறை காயாக உள்ள பெயர்கள்) தன்னால் இனம்காண இயலவில்லையென்றால், உடனடியாக தனக்குத்தெரிந்த தகவல் களஞ்சிய நண்பர்களிடம் கேட்டு விடைபெற்றார்கள்.

இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பெரியோர்களும் விரும்பிப்படித்த ஒரு தொடர் அது.

அந்தத்தொடர் - “ஒரு நடிகையின் கதை”

இடையில் என்ன காரணமோ ஏதோ தெரியவில்லை சில கருங்காலிகளின் எதிர்ப்பினால் அந்தத்தொடர் நிறுத்தப்பட்டது. அத்தொடர் எழுதியவர் இப்போது கோவில் கோவிலாக சுற்றி, அதைப்பற்றிய பயணக்கட்டுரை எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகே….உனக்குப் பிடித்த வார இதழ்….கண்டிப்பாக நீ புரிந்துகொண்டேயாகவேண்டும்….

இன்றல்ல, அன்றல்ல, என்றுமே உனக்குப்பிடித்ததை மட்டுமே உனக்குக்கொடுக்கும் ஒரு வார இதழ்…படித்து அறிவை வளர்த்துக்கொள்…

2 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

முரளி, வெகுஜனத்தின் ரசனை என்பதை முற்றிலும் கொன்றொழித்துவிட்ட ஊடகங்களின் முதல் மாதிரி குமுதம்! என்றாலும் மாற்றாக நாம் நினைத்தவையெல்லாம் மாற்றாந்தாயாகிவிட்ட நிலையில் எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்கிற தேடலே இப்போதைய மிச்சம்! சினிமா மற்றும் கிசுகிசு ஆபாசப்பக்கங்களை கழித்துவிட்டு பார்த்தால் முக்கியமான நாளிதழ்கள் எல்லாமே எலும்புருக்கி நோய் வந்த மாதிரி ஆகிவிடும்! இன்றைய ஆபாச ஊடகங்களை புறக்கணிக்க நாம் தலைப்படும் வரையில், அவர்கள் வீட்டுப் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படாத வரையில் இந்த நரகல்கள் மிதித்து விடாமல் பார்த்து நடப்போம்! அருமையான பதிவு! தொரட்டும் உங்கள் சேவை!

Sadagopal Muralidharan சொன்னது…

உங்கள் கருத்து மிகவும் சரியே. நான் ஒரு காலத்தில் ..டன், ...டர், ....ரன், ....தம், ....மம், ஆகிய புத்தகங்களுக்காக மெனக்கெட்டு அலைந்து திரிந்து (என் வசிப்பிடம் பூனா, ஔரங்காபாத், டெல்லி, குர்காவ்(ன்), பெங்களூரு) வாங்கிப்படித்ததுண்டு. இப்போது அந்தக்கடைப்பக்கம் செல்லவே மனம் ஒப்ப மாட்டேனென்கிறது. எங்கே போய் தமிழ் வளர்ப்பது.

கருத்துரையிடுக