புதன், 16 செப்டம்பர், 2009

பூச்சாண்டிப்பெட்டி…. இரவு 10 மணி

boochaandi

வீட்டில் குழந்தைகள் சாதாரணமாக தொலைக்காட்சிப்பெட்டியை விடமாட்டார்கள். அவர்களுக்குப்பிடித்தமான கேளிக்கை, விளையாட்டு, பூகோளம், வரலாறு, இயற்கை, நாய், புலி, சிங்கம், காடு, மலை, வடிவேலு, விவேக், சிலந்தி மனிதன், எல்லாம் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அழுவார்கள். என்றும் இல்லாத விதமாக அப்போது தான் நமக்குப்பிடித்த ஆங்கில திரைப்படங்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். என்ன செய்வது. குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று விட்டுவிடுகிறோம் எப்போதும் மனைவிக்கே விட்டுக்கொடுக்கிறோமே? இன்று குழந்தைகளுக்காக விட்டுக்கொடுப்போமே என்ற ஒரு வஞ்சம் கலந்த பெருமை.

ஆனால் மேலோட்டமாக கவனித்ததில், கடந்த சில மாதங்களாக இரவு 10 மணியானால் போதும் என் மகன் தனியாகப்படுக்க,  தனியாக இருக்க மிகவும் அஞ்சுகிறான். தொலைக்காட்சியும் பார்க்க மறுக்கிறான். எனக்கோ மிக ஆச்சர்யம், அதிசயம்! இது மிக அரிது! அதுவும் குழந்தைகளுக்கு! ஏனென்றால் படுத்தவுடனே தூக்கம் வருவது குழந்தைகளுக்குத்தானே தவிர நமக்கல்ல! அந்த அச்சத்தை முன்னிட்டு இப்போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து நானும் படுத்துக்கொள்கிற கட்டாயம்! இதனால் என்னுடைய மூன்றாம் ஆட்ட ஆங்கிலத்திரைப்படம் தடைப்பட்டுவிட்டது. என்ன செய்வது? இப்போதுதானே நாம் இப்படியெல்லாம் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச்செய்ய இயலும்? சிறிது காலத்திற்குப் பிறகு ந்ம்மைப் பக்கத்தில் அண்ட விடுவார்களா? என்ன? அப்போதெல்லாம் நாம் விரும்பிக்கேட்டால் கூட உங்களுக்கு வேறு வேலையில்லை என்றுதான் சொல்லப்ப்போகிறார்கள். எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது அந்தக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களும் ஆவலாகக்கேட்டுக்கொண்டே தூங்கிவிடுகிறார்கள். அவ்வப்போது ஆச்சர்யப்படுகிறார்கள்!அவ்வப்போது நம்பவில்லை போலத்தெரிகிறது(?). ஆனாலும் விரும்பிக்கேட்கிறார்கள். சிரிக்கிறார்கள். எப்படி இருந்தாலும் த்னியாக, புலம்பெயர்ந்து (தாய் நாட்டிலேயேதான் – வேறு மானிலத்தில்) வாழும் எனக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதுமட்டும் அல்லாமல்,  சில சமயங்களில் என் வாரிசுகள் மைக்கேல் ஜாக்சன் போன்று ஆடிக்காண்பிப்பதையும், காகம் நீர் குடிக்கச்சிரமப்பட்ட கதையும், வலையில் சிக்கிய சிங்கத்தை எலி மீட்ட கதையும், மீண்டும் மீண்டும் கேட்டு, பார்த்து இரசிக்கிறேன்.

நேற்று மனைவியும், குழந்தைகளும் பக்கத்து வீட்டுக்குழந்தைக்கு(அண்ணா?) பிறந்த நாள் விழா கொண்டாடச் சென்றிருந்தார்கள். மணி இரவு 10. நான் பொழுது செல்லாமல் சுணக்கமாக இருந்ததால், கையை வைத்துக்கொண்டு வெறுமனே இருக்காமல், தொலைக்காட்சிப்பெட்டியை நோண்டினேன். எல்லா அலைவரிசைகளிலும், உண்மை (நிஜம்), குற்றம் – நடந்தது என்ன?, போன்ற நிகழ்ச்சிகள். என்ன சொல்கிறார்கள்? பார்ப்போமே? அம்மாவே குழந்தையைக்கடத்துவது, அப்பாவே குழந்தையைக்கொல்வது, கடவுளின் அடியவர்கள் என்பவர்கள் கும்பிடுகிறோம் என்று சொல்லி ஆட்டைக்கடிப்பது, கோழியைக்கடிப்பது, பேய் வந்தவர்களின் முடியை வெட்டி மரத்திலடித்து கட்டுப்படுத்துவது. இன்னும் இங்கு நான் சொல்ல விரும்பாத சொல்லக்கூடாத செய்திகள்? எல்லாம் நம் தலையெழுத்து! பணம் கொடுத்து (தொலைக்காட்சிப்பெட்டி, டாடாவானம்<TATASKY>, பெட்டியை வைக்க ஒரு மரப்பெட்டி) தலைவலியை வாங்கிக்கொள்கிறோம்.

தொலைக்காட்சிப்பெட்டியா? பூச்சாண்டிப்பெட்டியா?

5 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

Value System - மதிப்பீடுகள், இந்த சமாச்சாரத்தை குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கின்றன! எனவே அவர்கள் நலன் கருதி பெரியவர்கள் தொலைக்காட்சியின் தீமையை தீமையாகவே கருதினால், குழந்தைகள் எதிகாலம் நலமாக அமையும் என நம்புகிறேன்! சரியான காலகட்டத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள்!!(Word Verificationஐ தவிர்க்கலாமே! பின்னூட்டமிடுகையில் சிரமப்படுத்துவதாக உணர்கிறேன்)

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பிரபு,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். உடனடியாக சரி செய்துவிடுகிறேன்.

க.பாலாஜி சொன்னது…

நல்ல கருத்துள்ள பதிவு... இன்று தொலைக்காட்சிகளில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவித குரூர சிந்தனையை குழந்தைகள் மனதில் திணிக்கும் செயலாகவே இருக்கிறது...இதுஒரு தவறான செயலும்கூட...

எனது அன்பர் ஒருவர் இந்த காரணங்களுக்காகவே தொலைக்காட்சி பெட்டி வாங்கமலேயே காலம் ஓட்டுகிறார். படம் பார்க்க தோன்றினால் கம்யூட்டரில் பார்த்துக்கொள்வார்கள்...

நல்ல சிந்தனைப்பகிர்வு அன்பரே....

க.பாலாஜி சொன்னது…

இந்தவாரம் பிளாக் பக்கம் வர இயலவில்லை...இன்றுதான் ஊரிலிருந்து வந்தேன்...அதனால்தான் உங்களது பதிவினைப்பார்க்க தாமதமாகிவிட்டது....

Sadagopal Muralidharan சொன்னது…

க.பாலாஜி சொன்னது…
நல்ல கருத்துள்ள பதிவு... இன்று தொலைக்காட்சிகளில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவித குரூர சிந்தனையை குழந்தைகள் மனதில் திணிக்கும் செயலாகவே இருக்கிறது...இதுஒரு தவறான செயலும்கூட...

எனது அன்பர் ஒருவர் இந்த காரணங்களுக்காகவே தொலைக்காட்சி பெட்டி வாங்கமலேயே காலம் ஓட்டுகிறார். படம் பார்க்க தோன்றினால் கம்யூட்டரில் பார்த்துக்கொள்வார்கள்...

நல்ல சிந்தனைப்பகிர்வு அன்பரே...

நன்றி பாலாஜி, உங்கள் கருத்துக்கும், வருகைக்கும். என்னுடைய சூட்சுமமும் அதுவே. 4 ஆண்டுகளுக்கு முன்னமே கணினி வாங்கிக்கொடுத்துவிட்டேன்.

க.பாலாஜி சொன்னது…
இந்தவாரம் பிளாக் பக்கம் வர இயலவில்லை...இன்றுதான் ஊரிலிருந்து வந்தேன்...அதனால்தான் உங்களது பதிவினைப்பார்க்க தாமதமாகிவிட்டது...

தாமதமானாலும் நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்று தெரியும். நன்றி பாலாஜி

கருத்துரையிடுக